‘அதிகாரத்தில் இருப்பவர்களின் ஈகோ தாக்கப்பட்டால், அவமானப்படுத்துவதே வாடிக்கை’ - ராகுல் கண்டனம்..
GST வரி குறித்து கருத்து தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவைவில் தொழில்துறையினருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் புகார் தெரிவித்திருந்தார். அவர், “ஸ்வீட்டுக்கு 5 சதவிகிதம், காரத்திற்கு 12% சதவிகிதம் , பேக்கரியில் பிரெட், பண்ணு தவிர எல்லாவற்றிற்கும் 28 % வரி உள்ளது. ஒரே பில்லில்.. ஒரு குடும்பத்திற்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட முடியவில்லை. இதை பார்த்து கஸ்டமர்கள் சண்டைக்கு வருகிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள்.. இல்லை எல்லாவற்றிற்கும் அதிகரியுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், நேற்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் மன்னிப்புக் கோரியிருக்கிறார். மேலும், தான் எந்தக் கட்சியையும் சாராதவர், தயவு செய்து என்னை மன்னியுங்கள் என அவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிகாரத்தில் இருப்பவர்களின் ஈகோ தாக்கப்பட்டால், மற்றவர்களை அவமானப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிக உரிமையாளர், ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குமாறு கோரிக்கை வைத்தால் ஒரு மக்கள் சேவை செய்பவர் ஆணவத்துடனும் அவரை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்டுள்ளார்.
இதுவே, அவரின் கோடீஸ்வர நண்பர்கள் விதிகளை வளைந்து கொடுக்க கூறினாலோ, சட்டங்களை மாற்ற கூறினாலோ, தேசிய சொத்துக்களை பெற முற்பட்டாலோ, பிரதமர் மோடி அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்.
பணமதிப்பிழப்பு, அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சியிருக்கிறது.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோ தாக்கப்பட்டால், அவர்களை அவமானப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனபதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
When the owner of a small business, like Annapoorna restaurant in Coimbatore, asks our public servants for a simplified GST regime, his request is met with arrogance and outright disrespect.
— Rahul Gandhi (@RahulGandhi) September 13, 2024
Yet, when a billionaire friend seeks to bend the rules, change the laws, or acquire…