ரஜினியின் 'கூலி' படத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய அனுமதியின்றி 'வா வா பக்கம் வா' பாடலின் இசையை பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தின் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . சமீபத்தில் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. குறிப்பாக தங்கமகன் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த பகுதியை நீக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


