எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்டவிரோத மணல் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்டவிரோத மணல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனக்கு சொந்தமான புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த கட்டுமானப் பணிகளுக்காக, அரசு அனுமதியின்றி பெருமளவில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலர் (VAO) அளித்த புகாரின் பேரில், மணல் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அதிமுக நிர்வாகி தனபால் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 320 யூனிட் ஆற்று மணலை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
இன்று காலை, ஆண்டாங்கோவிலில் உள்ள விஜயபாஸ்கரின் கட்டுமானத்தில் இருக்கும் வீட்டின் வளாகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 35 யூனிட் மணலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மணல் அனைத்தும் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு, எல்லமேடு பகுதியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கட்டுமானப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சரின் வீட்டிலேயே அரசு அனுமதியின்றி மணல் பதுக்கப்பட்டதாகக் கூறி நடத்தப்பட்ட நடவடிக்கை, கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

