ரூ. 358.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகள் திறப்பு

 
tn

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.358.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3010 குடியிருப்புகளை  தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.7.2023) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 358 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகளை திறந்து வைத்து, இக்குடியிருப்பிற்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

tn

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புர ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தல்

tn
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் சந்தோஷ் நகர் பகுதி 1 திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தூண் மற்றும் 14 தளங்களுடன் 57 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் 410 புதிய குடியிருப்புகள், சந்தோஷ் நகர் பகுதி 2 தூண் மற்றும் 14 தளங்களுடன் 20 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் 150 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி – 1 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 94 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 648 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி – 2 தூண் மற்றும் 11 தளங்களுடன் 57 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் 396 புதிய குடியிருப்புகள்;

செங்கல்பட்டு மாவட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள், காயரம்பேடு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 7 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 7 தளங்களுடன் 25 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் 480 புதிய குடியிருப்புகள்;
வேலூர் மாவட்டம், பத்தலபல்லி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 33 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் 304 அடுக்குமாடி குடியிருப்புகள்; தருமபுரி மாவட்டம், மோலையானூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதி - 3 திட்டப்பகுதியில் தரைத்தள இரட்டை குடியிருப்புகள் 10 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 110 குடியிருப்புகள்; கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 6 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் 358 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, இக்குடியிருப்பிற்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார்.

tn

இன்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. "நம் குடியிருப்பு, நம் பொறுப்பு" திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர்உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1583.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 15,505 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் , தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் 100 மாணவர்களுக்கு DBS வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 25 இலட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 5 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர்  வழங்கினார்.