அதிகரிக்கும் அரசு பேருந்து விபத்துக்கள்- போக்குவரத்துத்துறை அதிரடி முடிவு
அரசு பேருந்துகள் பராமரிப்பு மற்றும் செயல் திறனை முறையாகக் கண்காணிக்க அனைத்து போக்குவரத்து கழகத்திற்கும் போக்குவரத்து துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து டயர் வெடித்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கடந்த மாதம் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்குச் சென்ற பேருந்தும், திருப்பூரில் இருந்து காரைக்குடிக்கு வந்த பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர். மேலும் சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் அரசு பேருந்து சரியாக பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 15 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் .
இப்படியாக சமீபகாலமாக அரசு பேருந்துகள் விபத்துகள் என்பது அதிகரித்துள்ளது , கடந்த 30 நாட்களில் மட்டும் 20 க்கு மேற்பட்டோர் அரசு பேருந்து விபத்து காரணமாக உயிரிழந்தனர். எனவே வரும் நாட்களில் விபத்துகளை தவிர்க்க, அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை ஓட்டுநர்கள் முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். பேருந்தின் டயர்களில் உள்ள வீல் நட்டுகள் இறுக்கமாக இருக்கின்றதா என்பதை பேருந்தை எடுக்கும் / நிறுத்தும் போது உறுதி செய்து கொள்ள வேண்டும். முகப்பு விளப்புகள் பிரகாசமாக எரிவதை / வைபர் மோட்டர் சரிவர இயங்குவதை உறுதி செய்த பின் பேருந்தை இயக்கவும், மழை நேரங்களில் முன்புறம் செல்லும் வாகனத்திற்கும் பேருந்துக்கும் இடையே போதிய இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும்.
பணிமனைகளில் உள்ள டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை (( water paste போட்டு பார்த்து)) உறுதி செய்த பின்பே டீசல் நிரப்ப வேண்டும், பேருந்துகளின் டயர்கள் செயல்திறன், காற்று இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். பேருந்தின் பிரேக் அமைப்பு, இயக்கத்திறனை பரிசோதித்த பின் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு டெப்போக்களில் இருந்து எடுக்க வேண்டும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்து நிலை குறித்து சம்பந்தப்பட்ட டெப்போ மேலாளர்களுக்கு புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக பழுது நீக்கம் செய்து தரவேண்டும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பணிமனைகளில் பேருந்துகள் பராமரிப்பை முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை மேலாளர்கள் கண்காணித்து தொடர்ந்து அறிக்கை வழங்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது .


