தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் - தினகரன் வலியுறுத்தல்

 
ttv dhinakaran

தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார் . 

govt

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் - தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு கடந்த காலங்களை போல காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட தமிழக அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்குவதோடு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.