தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

 
மழை

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் இந்த  ஆண்டு கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பல நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த பின்னரும் கூட வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை..  இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம்  தெரிவித்திருக்கிறது.   அதற்கேற்ப பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

புதுச்சேரி மழை

அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில்   ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தது.  இந்நிலையில்  தென் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய பரவலாக லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று ஜூன் 19 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்,  மேலும், அடுத்த 5 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என்றும் கூறியுள்ளது.