மறைந்தார் ரத்தன் டாடா..
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பிரபலமான மற்றும் முக்கியமான தொழிலதிபராக இருந்தவர் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா. மும்பையில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனான ரத்தன் டாடா, 1959-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டமும், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பயின்றார்.
முன்னதாக 1962-லேயே டாடா குழுமத்தில் இணைந்த ரத்தன் டாடா, சிறிய பொறுப்புகளில் இருந்து படிப்படியாக உயர்ந்து 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவரது ஆலோசனைகளின் பேரில் டாடா குழுமத்தில் நிதி நெருக்கடியில் இருந்த நிறுவனங்கள் மீண்டன. டாடாவின் தலைவராக பொறுப்பேற்ற பின் பல புதிய திட்டங்களை புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை பல மடங்காக உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கியதுடன், பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்ட நிறுவனமாக டாடா குழுமம் திகழ்வதும் இவரது வழிகாட்டுதலின் பேரிலேயே..
நடுத்தரக் குடும்பத்தினர் ஒரே பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும் போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. அந்தக் கனவின் பலனாக 1998ல் ‘டாடா இண்டிகா’உருவானது. இதன் தொடர்ச்சியாக நடுத்தர வர்க்கத்தினரும் பயன்படுத்தும் வகையில் 2008ம் ஆண்டு உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு ‘டாடா நானோ’ காரை காரை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக இருந்து மாபெரும் மாற்றம் ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா.
2012ம் ஆண்டு வரை டாடா குழுமத் தலைவராக இருந்த ரத்தன், அதன்பின்னர் டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தினார். தனது 21 ஆண்டுகால தலைமையின் கீழ் டாடா குழுமத்தின் வருவாயை 40 மடங்காகவும், லாபத்தை 50 மடங்காகவும் பெருக்கினார். Born with Silver Spoon என்றிருந்தாலும் மிகவும் எளிமையான குனமுடையவராகவே ரத்தன் டாடா இருந்து வந்தார்.
பல்வேறு திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்த டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம் உள்ளிட்ட விருதுகளையும், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களையும் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேரின் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
தொழில் துறையிலும் , மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என அனைத்த் தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.