நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தீவிர சோதனை; பார்வையாளர்கள் வருகைக்கு தடை..!

 
1 1

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் மத்திய அரசு இன்று தெரிவித்தது.

இத்தகைய பதட்டமான சூழலில், இன்றிரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது.பாதுகாப்பு கருதி பஞ்சாப் vs டெல்லி இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டி கைவிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு முக்கிய அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. BCAS எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து துறை பாதுகாப்பு ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவின் படி, அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு ப்ரீ-போர்டிங் செக் செய்ய வேண்டும். மேலும் பார்வையாளர்கள் விமான நிலைய டெர்மினல் கட்டடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரியாக வேலை செய்கிறதா? என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏர் மார்ஷல் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும். விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும்.

விமான நிலைய அதிகாரிகள், பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றை உறுதி செய்ய பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏர் ஸ்ட்ரிப்ஸ், ஏர் ஃபீல்ட்ஸ், ஏர் போர்ஸ் ஸ்டேஷன்ஸ், ஹெலிபேட்ஸ், விமானப் படை பள்ளிகள், விமானப் படை பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.

பஹல்காம் போன்று ஒரு சம்பவம் எந்த ஒரு இடத்திலும் நடந்து விடக் கூடாது. கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், ஏரோ மாடல்ஸ், பாரா கிளைடர், ஆளில்லா ஏரியல் சிஸ்டம்ஸ், ட்ரோன்கள் போன்றவற்றின் பயணத்தை கண்காணிக்க வேண்டும். விமான நிலையங்களில் உள்ள கார்கோ பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.