நாமக்கல்லில் மொத்தம் 6 பேரின் கிட்னி விற்கப்பட்டது விசாரணையில் அம்பலம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், தறி தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக மீண்டும் எழுந்துள்ள புகார் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளையம் குமாரபாளையம் வெப்படை உள்ளிட்ட பகுதிகள் விசைத்தறி, கட்டுமானம், சாயபட்டறை தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளாக இருக்கின்றன. இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கான இடைத்தரகர்கள் அவர்களை பல்வேறு நகரங்களுக்கு அழைத்து சென்று போலியான ஆவணங்களை தயாரித்து, தானம் செய்வதை போல் சிறுநீரக விற்பனை நிகழ்ந்தது அப்போது தெரிய வந்தது. இது தொடர்பாக 2 தறிப்பட்டறை உரிமையாளர்கள் உட்பட 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு பின் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டன.
சமீப காலமாக இதுபோன்ற புகார்கள் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் பள்ளிபாளையம் பகுதியில் சிறுநீரக விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன் தனது சிறுநீரகத்தை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்றதாக பெண் ஒருவர் கூறி இருப்பது இதனை உறுதிபடுத்தியது. குறைவான கூலி, கடன் பிரச்சனை ஆகியவற்றினால் தத்தளிக்கும் தொழிலாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி சிறுநீரகங்களை விற்பது இலைமறை காயாக தொடர்ந்து நடந்து வருவதாக கூறுகின்றனர் பள்ளிபாளையம் பகுதி தொழிற்சங்க நிர்வாகிகள். குடும்ப நிதி நெருக்கடியால் சிறுநீரகத்தை விற்பனை செய்த தொழிலாளர்களே இடைத்தரகராக மாறிவிடும் நிகழ்வும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் வழங்கப்படவில்லை, கிட்னியை கொடுத்தவர்களே பிற்காலத்தில் கிட்னி புரோக்கர்களாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீரமணி மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் கிட்னி விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆறு நபர்களில் 5 நபர்கள் போலியான முகவரியைப் பயன்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்னி திருட்டு கும்பலே போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்துள்ளது. சிறுநீரகம் தானமாக பெற்றவரின் உறவினர் என இந்த சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.வீடியோ வெளியிட்ட பெண்ணிடமும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் விசாரணை நடத்தினர்.


