என்னது நயினார் நாகேந்திரன் வருங்கால முதல்வரா?- நெல்லையில் பரபரப்பு போஸ்டர்
வருங்கால முதல்வரே என பாஜக மாநில தலைவருக்கு அடைமொழியுடன் அவரது சொந்த ஊரான நெல்லை முழுவதும் ஒட்டபட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2026 ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து அதற்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையையும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த வார்த்தை இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது . இந்த நிலையில் பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனை வரவேற்று அவரது சொந்த ஊரான நெல்லையில் பல போஸ்டர்கள், விளம்பர பதாகை போன்றவை ஒட்டபட்டு வருகிறது. இதில் ஒரு போஸ்டரில் நயினார் நாகேந்திரனை வருங்கால முதல்வரே என வரவேற்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் அம்மா செல்வகுமார் என்பவர் ஒட்டியுள்ளார். ஏற்கனவே பாஜக - அதிமுக கூட்டணி அமைந்ததில் இருந்து பல்வேறு பேச்சுக்கள் எழுந்துவரும் நிலையில் இந்த போஸ்டர்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.


