பயங்கரவாதத்திற்கு துணை போகிறதா பாகிஸ்தான்..? மசூத் அசாருக்கு ரூ. 14 கோடி இழப்பீடு தரும் பாக்..!
இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில், தீவிரவாதி மசூத் அசார் தப்பியிருந்தாலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, அவர்களது உறவினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம், மொத்தமாக 14 கோடி ரூபாய் வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக தி ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, மசூத் அசார் இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 கோடி பெற தகுதியுடையவர். சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது உலக சமுதாயத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் துல்லியமான தாக்குதல்கள் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்தன. பொதுமக்களை அல்ல. இந்த பெரும் இழப்புக்கு பதிலளிக்கும் விதமாக, மசூத் அசார் தானும் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார். பழிவாங்குவதாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
தீவிரவாதி பட்டியலில் உள்ள மசூத் அசாரின் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவது, சர்வதேச அளவில் பெரும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.தற்போது, மசூத் அசாரின் குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டுமே உயிரோடிருப்பதால், இந்த 14 கோடி ரூபாயும் அவருக்கே செல்ல வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் தீவிரவாதம் மேலும் வளர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுவது புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.


