நாட்டை ஆள நடிப்பது மட்டுமே தகுதியா?? அப்படி நினைப்பதே அவமானம் - சீமான்

 
seeman

திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே நாட்டை ஆள்வதற்கான தகுதி என நினைப்பது அவமானம்  என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ ஒரு நாட்டில் நீர் வளம், நில வளத்தை தாண்டி அறிவு வளம் முக்கியம், நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், வகுப்பறை வர்த்தக அறையாக மாறிவிட்டது. யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் நல்ல கல்வியை கற்றுக்கொள்ளலாம். பல அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது. நெல் கொள்முதலுக்கு கூடுதல் விலை கொடுக்கலாம். ஆனால், அதனை சேமித்து வைக்க குடோன்கள் உள்ளதா?. ஆனால் டாஸ்மாக்குக்கு கிடங்கு உள்ளது. அதற்கு பாதுகாப்பும் உள்ளது. சினிமா டிக்கெட் கட்டணம் என்ன?, விவசாய பொருட்களின் விலை என்ன?.

vijay

ஊழல், லஞ்சம் பற்றி பேச பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளுக்கு அருகதை இல்லை. மணிப்பூர் போல தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டாம். தாமிரம் தட்டுப்பாட்டை பற்றி பேசுபவர்கள், தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேசுவார்களா?. நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் பல ஆண்டுகளாக மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறார். ஆனால், நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர விரும்புவதால் உதவிகளை வெளிப்படையாக செய்து வருகிறார். படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம், பாராட்டலாம்.

வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது என்ற எனது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் விஜய் பேசியுள்ளார். அது வரவேற்க வேண்டிய விஷயம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம். தள்ளி விடக்கூடாது. இன்றைக்கு உள்ள அரசியல் தலைவர்களில் மூத்த தலைவர் நல்லகண்ணு சிறந்தவர். அவரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட நம்மால் ஆக்க முடியவில்லை என்பது தலைகுனிவு. திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கும், ஒரு இனத்தை வழி நடத்துவதற்கும் தகுதி என நினைப்பது அவமானகரமானது. இது மாறாது. எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும்” என்று  கூறினார்..