என்னது... அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையனா?

அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என குறிப்பிட்டும், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பினார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார். அவருடன் பாஜக எம்.எல்.ஏ.நயினார் நகேந்திரனும் உடன் சென்றார். தமிழக அரசியல் களம் பற்றி அண்ணாமலை பாஜக தலைமையிடம் கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரண்டு முறை தனியாக டெல்லிக்கு சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி மறுக்கும் நிலையில், செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என குறிப்பிட்டும், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிசா செந்தில் என்பவர் இந்த போஸ்டரை அச்சடித்து ஒட்டியுள்ளார். திமுகவிலிருந்து அதிமுகவிற்கு கட்சி மாறிய இவர், ஓபிஎஸ் அணிக்கு சென்றதால் 2022 ஆம் ஆண்டே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இல்லாத போஸ்டரை அடித்து, மதுரை முழுவதும் ஒட்டியுள்ளார்.