சூடு பிடிக்கிறதா தேர்தல் களம்? திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை..
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுகவின் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அமெரிக்காவிலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று இரவு அமெரிக்காவிலிருந்து காணொலி வாயிலாக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை ஆய்வு செய்தார்.
▪️முப்பெரும் விழா ஏற்பாடுகள், கழகத்தின் பவளவிழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
▪️மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும் விவரங்களைக் கேட்டறிந்தார்.
▪️பவளவிழாவையொட்டி கழகத்தினரின் வீடுகள்-அலுவலகங்கள்-வணிக வளாகங்களில் கொடிகளை பறக்கவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
▪️கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
▪️அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
▪️சிகாகோவில் நேற்று நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாக சந்தோஷமாக தெரிவித்தார்.
▪️ தலைவர் அவர்கள் தமிழ்நாடு திரும்பியதும் கழகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்தார். ”
இந்த ஆலோசனைக் கூட்டத்தி அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இதுவரை கழகத்தின் 11 சார்பு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் பணிகளை ஆய்வு செய்தது தொடர்பான விவரங்களையும் - அடுத்து திட்டமிடப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டங்கள் பற்றியும் முதலமைச்சரிடம் அமைச்சர்கள் எடுத்துக்கூறினர். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கழகத்தினை வெற்றி பெறச் செய்திட, தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.