அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகிறதா தவெக மாநாடு?
வரும் 23ஆம் தேதி தவெக மாநாடு நடைபெறுவதாக இருந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அன்றைய தினத்தில் இருந்தே அவரது நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. ஒரு புறம் தான் திட்டமிட்டிருந்த படங்களிலும் மறுபுறம் கட்சியின் செயல்பாடுகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு, தொகுதிவாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, கட்சியின் கொடி, முதல் மாநில மாநாடு ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
சமீபத்தில் கட்சி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு, மாநாடு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாகவும் தமிழக வெற்றிக் கழகம் மாறியதை கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க விரைவில் மாநாடு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதே நேரத்தில் தமிழக வெற்றி கழகம் மாநாடு நடத்த அனுமதி கூறி இருந்த நிலையில் பல நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதியும் காவல்துறை வழங்கி இருந்தது.
இந்நிலையில் வரும் 23ஆம் தேதி தவெக மாநாடு நடைபெறுவதாக இருந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை நிபந்தனைகளை செப்டம்பர் 23க்குள் நிறைவேற்றுவது கடினம் என்பதால், மாநாடு தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மாநாடு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால், மாநாடு நடத்துவதற்கு ஏதுவாக இருக்குமா என கருத்துக்கேட்டார். அதேசமயம் தீபாவளி மாதம் என்பதால் காவல்துறை அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.