தங்கம் வாங்க இது சரியான நேரமா? சவரனுக்கு சுமார் 17,240 ரூபாய் குறைந்தது..!
சென்னையில் கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது அதிரடி சரிவைக் கண்டுள்ளது சாமானிய மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.34 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது அதன் விலை கணிசமாகக் குறைந்து வருவது நகைப்பிரியர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர், உலகப் பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. பொதுவாகப் போர் காலங்களில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை உயர்வது வழக்கம். ஆனால், இந்த முறை போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது, அமெரிக்க டாலரின் மதிப்பை உலக சந்தையில் அசுர வேகத்தில் வலுப்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்திருந்த முதலீடுகளைத் திரும்பப் பெற்று, அதிக லாபம் தரும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் கச்சா எண்ணெய் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். உலக சந்தையில் டாலர் எப்போதெல்லாம் வலுவடைகிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் மீதான மோகம் குறைந்து அதன் விலை சரிவது வழக்கம்; அந்தச் சூழலே இப்போது நிலவுகிறது.
மார்ச் மாதத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் 1,26,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி அது 1,08,960 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதாவது, இந்த ஒரே மாதத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு சுமார் 17,240 ரூபாய் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது சதவீத கணக்கில் பார்த்தால் சுமார் 13.67% சரிவாகும்.
வரலாற்று உச்சபட்ச விலையான 1,34,400 ரூபாயுடன் ஒப்பிடும்போது, தற்போது ஒரு சவரன் தங்கம் 25,470 ரூபாய் மலிவாகக் கிடைக்கிறது. இந்த 18% விலை சரிவு, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தரக் குடும்பங்களுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. தங்கம் விலை குறையும்போது, அதனுடன் சேர்த்து நாம் செலுத்தும் செய்கூலி மற்றும் சேதாரத் தொகையும் கணிசமாகக் குறையும் என்பது கூடுதல் லாபமாகும்.
உதாரணமாக, மார்ச் 1-ஆம் தேதி ஒரு சவரன் செயின் வாங்க 1.45 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில், இன்று அதே நகையை 1.25 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். இந்தச் சிறிய கால இடைவெளியில் ஒரு சவரன் நகைக்கு மட்டும் சுமார் 19,800 ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க முன்வரவில்லை. சர்வதேச வங்கிகளின் இந்த முடிவும் தங்கம் விலை மேலும் குறையச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. "தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் செல்லுமா?" என்பதே இப்போது இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

