‘ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது?’ கடுப்பான முதல்வர் ஸ்டாலின் - மத்திய அரசுக்கு கண்டனம்..

 
stalin


நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தாவுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பிணராய் விஜயன், கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட இந்தியா கூட்டணி  கட்சிகள் ஆளும் 9 மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படதாதைக் கண்டித்து  அந்தந்த மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். 

Mamata

இந்நிலையில்  மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் , கூட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிப்பேன் என்றும் சில முக்கிய கருத்துக்களை பேசவேண்டியுள்ளது என்றும்  தெரிவித்திருந்தார். இதற்காக நேற்றே டெல்லி சென்றார். தொடர்ந்து இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்றார். ஆனால் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி,  “மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு 10-20 நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தனக்கு 5 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டு,  தன்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது.  மேலும் கூட்டத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை வலியுறுத்தினேன்.  2015-ம் ஆண்டில் இருந்து பிரதமர் தலைமையில் செயல்படும் இந்த அதிகாரம் இல்லாத நிதி ஆயோக்கை கலைத்து விட்டு,  2014 வரை செயல்பட்டு வந்த planning commission என்றழைக்கப் படும் திட்ட குழுவை மீண்டும் அமைக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.  

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.