இஸ்ரோவின் 101வது ராக்கெட் தோல்வி! தரைதளத்தில் இருந்து புறப்பட்டு 8.13 நிமிடங்களில் கோளாறு
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை(EOS-09) சுமந்துகொண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி51 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறால் இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோவின் 101வது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டில் RISAT-1B என்று அழைக்கப்படும் EOS-09, அதிநவீன C-band செயற்கை துளை ரேடார் (SAR) என்ற சென்சார் கருவிகள் கொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் மூலம் இரவு – பகல் என எந்த நேரத்திலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லிய படங்களை எடுக்கமுடியும்.மேலும் புவி கண்காணிப்பு மட்டுமின்றி, நாட்டின் எல்லை பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளுக்கான முக்கிய தகவலை இந்த செயற்கைக்கோள் வழங்க வடிவமைக்கப்பட்டது. இன்று காலை 5.59 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவு தளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் புறப்பட்டு முதல் 2 ஸ்டேஜ் சரியாக பயணித்தது. தொடர்ந்து மூன்றாவது அடுக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியாக 8 நிமிடம் 13 வினாடிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என இஸ்ரோ தலைவர் கட்டுப்பாட்டு அறையில் அறிவித்தார்.

ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு மற்றும் நான்காவது அடுக்கு பிரிதலுக்குப் பிறகு செயற்கைக்கோள் புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். மேலும் பூமியிலிருந்து 534 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் செலுத்தப்பட்டதிலிருந்து 17 நிமிடத்திற்குள் புவி வட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்றாவது அடுக்கில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் , திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், “இன்று பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. நான்கு கட்டங்களாக ஏவூர்தி இருந்தது. முதல் இரண்டு கட்டங்கள் நாம் எதிர்பார்த்தது போல் இருந்தது. மூன்றாவது கட்டம் Solid motor system. மூன்றாவது கட்டத்தில் மோட்டார் கம்ப்ரசரில் வீழ்ச்சி இருந்தது. இதனால் திட்டம் வெற்றியடையமுடியவில்லை. இதனை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றோம். விரைவில் அதனை தெரிவிப்போம்” என்றார்.


