"இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்பதை ஏற்க முடியாது" - உயர்நீதிமன்றம் கருத்து!!
பாடல்கள் காப்புரிமை வழக்கு விசாரணையில் நான் எல்லோருக்கும் மேலானவன்தான் என்று இளையராஜா தரப்பு கூறியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில் காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இரு நிறுவனங்களின் மீதும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும் , இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. அத்துடன் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுள்ளோம் என்றும் அதன் அடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன் முகமது சபிக் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 10-ம் தேதி இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என தன்னை நினைக்கிறார் என்று குறிப்பிட்டார் . இதற்கு இளையராஜா தரப்போ ஆம் நான் எல்லோருக்கும் மேலானவன் ; தான் வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தனர். இதை கேட்ட நீதிபதி மகாதேவன், இசை மும்மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால், நீங்கள் அப்படிச் சொல்வதைக் கேட்க முடியாது என்று கருத்து கூறினார்.

எல்லோருக்கும் மேலானவன் எனக் கூறியது, பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா, தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என நீதிபதி உங்களுக்கே தெரியும்” என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். இரு தரப்பு விசாரணைக்கு பிறகு இந்த வழக்கானது வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


