ஓடும் பேருந்தின் கீழ் படுத்து தற்கொலை செய்துகொண்ட ஐடி ஊழியர்! சென்னையில் பரபரப்பு
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் IT நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் மாநகரப் பேருந்து பின் சக்கரத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை ஜெயராமன் பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா. 32 வயதான இவர் தனியார் IT நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று வேலைக்கு செல்வதற்காக வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் நடந்து வரும் பொழுது, சுங்கச்சாவடியில் இருந்து திருவான்மியூர் வரை செல்லக்கூடிய 6D மாநகரப் பேருந்து மோதி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பேருந்தை ஒட்டி வந்த ஓட்டுநரான திருநாவுக்கரசு என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, சுங்கன்சாவடியில் இருந்து திருவான்மியூர் செல்லக்கூடிய 6Dமாநகரப் பேருந்து வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை திரும்பிய போது, மாநகர பேருந்து வருவதை பார்த்த ஜியாவுல்லா உடனடியாக ஒடி போய் பேருந்து பின் சக்கரத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


