எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான கல்லூரியில் ஐடி ரெய்டு!
எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
. திருச்சி மாவட்டம் முசிறி அருகே செயல்பட்டு வரும் எம்.ஐ.டி பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரிளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்தக் கல்லூரியின் உரிமையாளர் இளங்கோவன் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராவார். இவர் மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அத்துடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, இளங்கோவனும் உடனிருப்பார் எனவும், அந்த அளவிற்கு அவரது நம்பிக்கைக்குரியவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளங்கோவனுக்குச் சொந்தமான் முசிறி எம்ஐடி பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரிகளில் தலா 5 பேர் வீதம் , பத்து பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஆவண கோப்புகள் மற்றும் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது கல்லூரியின் உரிமையாளர் இளங்கோவன் சம்பவ இடத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.

வருமானவரித் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை நேற்று பிற்பகல் முதல் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரியின் வழக்கமான நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் இந்த சோதனை நடைபெற்று வந்தது தெரியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நீடித்து வருவது குறிப்பிடத்தகக்து. முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா?, புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறதா என்கிற தகவல்களை வெளியிட வருமான வரித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


