வரி ஏய்ப்பு புகார்... பிரபல பச்சையப்பாஸ் துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!

 
pachaiyappas

சென்னை, காஞ்சிபுரம், வேலூரில் பிரபல துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் பழமையான மற்றும் பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று பச்சையப்பாஸ் சில்க்ஸ். கடந்த 1926ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த துணிக்கடை, தற்போது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருகிறது. பச்சையப்பாஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து இன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடை உரிமையாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

pachayappas

சென்னை தியாகராயநகரில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் கடையிலும் வேலூர் மாவட்டத்தின் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில துணிக்கடைகள், செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்கேபி நிதி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? வரி ஏய்ப்பு நடந்ததா? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.