2026 தேர்தலில் வெற்றிபெற ஐடி விங் தீவிரமாக பணியாற்ற வேண்டும் - இபிஎஸ் அறிவுறுத்தல்..
இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கவும், 2026 தேர்தலில் வெற்றி பெறவும் அதிமுக ஐடி விங் அணியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின்( IT Wing)ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய கே. பி.முனுசாமி, “பாஜக தமிழகத்தில் உயர்ந்துள்ளது என்ற ஒரு மாய தோற்றத்தை தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் மட்டுமே ஏற்படுத்தி வருகின்றனர். மொத்தமாக 10 பேர் அமர்ந்து மத்திய அரசு வழங்கும் தகவல்களை வைத்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர்கள் செயலாற்றி வருகின்றனர். திமுக ஆட்சியில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தொழிற்சாலைகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர்கள் கொண்டு வந்தது என கூறி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கள் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிமுகவின் சாதனைகளை, செய்திகளாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதிமுகவுக்கு எதிரான அவதூறுகளை முறியடிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பல சோதனைகளை கடந்தே ஆட்சிகாலத்தை சிறப்பாக நிறைவு செய்தோம். வறட்சி, புயல் , வெள்ளம், கொரோனா என பல இக்கட்டான நெருக்கடிகளை சமாளித்து மக்களிடத்தில் நற்பெயரை எடுத்தோம். தேர்தலுக்கு இன்னும் 15 மதங்களே உள்ளன.
இதற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை; இனி வேகமாக பணி செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்ப பொறுப்புகள் அனைத்தும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பில் உள்ளவர்களை promote செய்வது உங்கள் வேலை இல்லை. அவர்கள் தினசரி நிகழ்வுகளை நீங்கள் பதிவு செய்து வந்தால் மக்களும் இளைஞர்கள் விரும்ப மாட்டார்கள். கட்சியின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பணியாற்றினால் போதும்.தனி யூடியூப் சேனல் உருவாக்கி திறமைகளை பயன்படுத்தி அதிமுக செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்க்கும் ரீல்ஸ் பதிவு செய்ய வேண்டும்.
உள்ளூர் பிரச்சனைகளை காணொளியாக பதிவுசெய்ய வேண்டும். உங்கள் செல்போன் தான் உங்களுக்கு மேடை. தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் இளைஞர்கள் வாக்கு 40% உள்ளது. முதிய தொண்டர்கள் மறைவு, இளைஞர்கள் வாக்குகள் சரிவு என 10 சதவீதம் வாக்குகளை நாம் இழந்துள்ளோம். இளைஞர்களின் வாக்குகளை ஈர்த்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும். 2026 தேர்தல் வெற்றி என்ற இலக்கை அடைய தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.