இது வெறும் டிரெய்லர் தான். மார்ச் 9 ஆம் தேதி திருச்சியில் மெயின் பிக்சர் காட்டவுள்ளோம் - முதல்வர் ஸ்டாலின்..!

 
1

மதுரையில் நடைபெற்ற தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இக்கூட்டத்தை மதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவோடு ஒப்பிட்டுப் பேசினார். தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் முகவர்கள் உள்ள நிலையில், மதுரையில் மட்டும் 1.5 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே பூத் அளவில் திமுகவைப் போல தேர்தலுக்குத் தயாரான மற்றொரு கட்சியை யாராலும் காட்ட முடியாது என அவர் சவால் விடுத்தார்.

தற்போது நடைபெற்று வரும் மண்டல மாநாடுகள் வெறும் 'டிரெய்லர்' தான் என்றும், வரும் மார்ச் 9-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மாநாடே 'மெயின் பிக்சர்' என்றும் அவர் உற்சாகமாகக் குறிப்பிட்டார். அடுத்த 3 மாதங்களில் மொத்தம் 15 மாநாடுகள் நடத்தி 20 லட்சம் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், திமுக படைக்கும் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் அவர் சூளுரைத்தார்.

வரும் தேர்தலில் திமுக தனித்து ஆட்சியமைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று குறிப்பிட்ட அவர், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே லட்சியம் என்றார். ஒவ்வொரு பூத்திலும் கூடுதலாக 350 வாக்குகளைப் பெற்றால், ஒட்டுமொத்தமாக 2.60 கோடி வாக்குகளைப் பெற்று எளிதாக வெற்றி பெறலாம் என்று நிர்வாகிகளுக்குக் கணக்கிட்டுக் கூறியதுடன், வெற்றி பெறுவது உங்கள் பொறுப்பு, உங்களுக்குத் தேவையானதைச் செய்வது என் பொறுப்பு என்றும் உறுதியளித்தார்.

மக்களே நமது எஜமானர்கள் என்பதால் அவர்களிடம் கனிவாகப் பேசி அரசின் சாதனைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் வரை வாக்கு இயந்திரங்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதும் முகவர்களின் மிக முக்கியமான பணி என்பதை அவர் வலியுறுத்தினார். "ரிப்பீட் மோடில்" மக்களைச் சந்தித்தால் மட்டுமே நமது வெற்றி "ரிப்பீட்" ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் மிரட்டல்களுக்குப் பயப்படத் தான் ஒன்றும் பழனிசாமி அல்ல என்று விமர்சித்த முதல்வர், அமைச்சர்கள் மீது நடத்தப்படும் ரெய்டுகளைக் கண்டு திமுக அஞ்சாது என்றார். மிசா, தடா மற்றும் எமர்ஜென்சி காலங்களையே பார்த்த இயக்கம் திமுக என்பதால், எத்தனை சோதனைகள் வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்று மோடி அரசுக்கு அவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.