‘மாப்பிள்ள மத்திய அரசுதான்.. ஆனா போட்டிருக்கிற சட்டை மாநில அரசோடது’ - மு.க.ஸ்டாலின்..!

 
stalin stalin

 தமிழ்நாட்டை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த பாஜகவினர் தொடர்ந்து முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இரண்டு நாள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது விழாவில் பேசிய முதல்வர், “ காட்பாடி ரயில் நிலையத்தில் வந்திறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பில் மனம் நிறைந்துவிட்டது.  வேலூரில் 5 மணிக்கு தொடங்கி , திருப்பத்தூருக்கு 11 மணிக்கு வந்து சேர்ந்தோம். திமுக தொண்டர்கள் வரவேற்போடு, பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் வரவேற்பு அளித்தனர்.  

2026 மட்டுமல்ல, 2031, 2036 என எப்போது இருந்தாலும் நாம்தான் என்பதை வரவேற்பு காட்டியிருக்கிறது. பொறுப்பில் உள்ள துறை மட்டுமல்ல, மாவட்டத்தையும் சிறப்பாக வளர்த்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

ஆம்பூர் பிரியாணி, சந்தனக்காடு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் திருப்பத்தூர். கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த நாட்டை, வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளோம், பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்... செய்து கொண்டே இருப்போம்

 ‘மாப்பிள்ள மத்திய அரசுதான்.. ஆனா போட்டிருக்கிற சட்டை மாநில அரசோடது’ - மு.க.ஸ்டாலின்..!

இந்தியாவின் ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு 9.21 விழுக்காடு. தலைநகரை மட்டும் வளர்க்கவில்லை, அனைத்து நகரங்களையும் வளர்த்துள்ளோம். திருப்பத்தூரில் 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன, 211 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். நாட்றம்பள்ளியில் தோல் அல்லாத காலணி பூங்கா அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது. நாட்டின் மொத்த வளர்ச்சியில் சுமார் 10 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாடு உடையது. தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக உருவாகி வருகிறது தமிழ்நாடு. 

தமிழ்நாட்டை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த பாஜகவினர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை பற்றி கவலைப்படுகிறார்கள். மிஸ்டு கால் தந்தும் கட்சியை வளர்க்க முடியாததால் அரசியல் லாபத்திற்காக கடவுளை மிஸ்யூஸ் செய்கிறார்கள.

பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்று உள்ளது. ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் தராங்க. இந்த காசுல வீடு கட்ட முடியுமா? அதுலயும் ரூ.72,000 மட்டும்தான் மத்திய அரசு தருது. மீதி கூடுதலாக ரூ.1.62 லட்சம் மாநில அரசு கொடுத்து வீடு கட்டித் தருகிறோம். பெயர்தான் அவங்களோடது. நிதி நம்முடையது. அதனாலதான் ஏற்கனவே நான் ஒரு டயலாக் சொன்னேன். மாப்பிள்ளை அவருதான். ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது” என்று கூறினார்.  தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.