ஜாக்டோ ஜியோ அதிரடி அறிவிப்பு: ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!

 
1 1

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 18ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் அந்த நாளுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஏற்கெனவே ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை இன்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன், பாஸ்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அப்போது, தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தினர். அப்படி நிறைவேற்றாதபட்சத்தில் ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.

அதற்கு முன்பாக, டிசம்பர் மாதம் 13 - ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும், டிசம்பர் 27- ஆம் தேதி வேலைநிறுத்த மாநாடு நடத்துவது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

திமுக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற மறுப்பதாகவும் நாங்கள் அறிவித்திருப்பது தேர்தல் நெருக்கடி அல்ல; எங்கள் தேவைக்கான நெருக்கடி என்றும் அவர்கள் கூறினர்.