தச்சங்குறிச்சியில் ஜன.3 ஆம் தேதி ஜல்லிக்கட்டு- தமிழக அரசு அரசாணை

 
Jallikattu Jallikattu

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

jallikattu

தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. இம்மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வருகின்ற ஜனவரி 3ம் தேதி அப்பகுதியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டி அந்த கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கி தமிழ்நாடு அரசு வருகின்ற ஜனவரி 3-ம் தேதி அந்த பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையில்  அப்பகுதியில் மேடை அமைத்தல், வாடிவாசல் அமைத்தல், பார்வையாளர் மாடம் அமைத்தல், காளைகளை வரிசைப்படுத்தி நிற்க வைக்கும் அட்டி அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மும்முறமாக செய்து அந்த பணிகளை முழுமையாக முடித்தனர். 

இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியிடுவதற்காக அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில்தான் ஜனவரி மூன்றாம் தேதி தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இது அந்த ஊர் மக்களையும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் காளை வளர்ப்பவர்களையும் காளையர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.