உலக பசி குறியீட்டில் பின் தங்கிய இந்தியா- ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்: ஜவாஹிருல்லா

 
 ஜவாஹிருல்லா

உலக பசி குறியீட்டில் தொடர்ந்து இந்தியா பின்தங்கி இருப்பதற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 ஜவாஹிருல்லா

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைஃப் ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் 127 நாடுகளில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உலகளாவிய பசி குறியிடு (Global Hunger Index) அறிக்கையை வெளியிட்டுள்ளது. 127 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிற்கு 105 ஆவது இடம் பிடித்துள்ளது.      

பசியின்மை குறியீடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகளை வீணாக்குதல், குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு கூறுகளின் அடிப்படையில் நாடுகளின் செயல்திறனை அளவிடுகிறது. இந்தக் குறியீட்டில் இந்தியா 27.3 மதிப்பெண்களுடன் 'தீவிரமான' பசி பிரச்சினைகள் கொண்ட 42 நாடுகளுள் ஒன்றாக ‘கவலைக்குரிய’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் 36 நாடுகள் மட்டுமே ‘கவலை’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதை ஓர் இந்தியனாக நமக்கு பெரும் வேதனை அளிக்கின்றது. இந்த ஆண்டு உலகளாவிய அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்கள் அதிகம் வாழும் தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளதும் கவலை அளிக்கின்றது. இந்தக் குறியீட்டில், இந்தியா தனது அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, நேபாளம், மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கி உள்ளது நமக்கு மேலும் வேதனை அளிக்கின்றது.

ஜவாஹிருல்லா

இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு கடுமையாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது. அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம்2.9 சதவீதமாக உள்ளது. நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. ஒன்றிய பாஜக அரசு வளர்ச்சி என்கிற பெயரில் விளிம்பு நிலை மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இந்த ஆய்வறிக்கை மிகத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறது. இந்த அவல நிலைக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒரு சிலரை மட்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று நடுத்தட்டு மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் நலனை ஒன்றிய அரசு பாதுகாக்க மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தவறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.