அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏற்றத்தை திரும்ப பெறுக- ஜவாஹிருல்லா
ஒன்றிய அரசு அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை ஏற்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மாதம் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், எட்டு அத்தியாவசிய மருந்துகளின் உச்சபட்ச விலையை அதன் தற்போதைய விலையில் இருந்து 50%அதிகரித்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த மருந்துகளில் பெரும்பாலானவை குறைந்த விலையுடையவை என்றும் நாட்டின் பொதுச் சுகாதாரத் திட்டங்களில் அவசரச் சிகிச்சைகளுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படக் கூடியவை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருந்து உற்பத்தியில் விலையேற்றம் என்பது உற்பத்தி மூலப் பொருட்களின் விலை, தொழிலாளர்களின் ஊதியம், வரி போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் நீட்சியாக இன்னும் ஏனைய மருந்துப் பொருட்களின் விலையும் உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திடீரென 50 சதவீத விலை உயர்வு என்பது ஏழை நடுத்தர மக்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும். விலை உயர்வைக் கருத்தில் கொண்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படலாம்.எனவே இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


