மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் என்ற உத்தரவை திரும்ப பெறுக- ஜவாஹிருல்லா
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் என்கிற உத்தரவு திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விடுதலைக்குப் பிறகு ஆர் எஸ் எஸ் அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.1966-ல் அதிகாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்பது அரசு விதி. அதன்படி தற்போது வரை மத்திய மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியத் திருநாட்டில் சமூக ஒற்றுமையைக் குலைக்கின்ற வகையில் அடிப்படைவாத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்களை பணியாற்ற அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும்.
58 ஆண்டுக்கால தடையை தற்போது நீக்க ஒன்றிய அரசுக்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு அரசு ஊழியர்கள் செயல்படுவதை மாற்றுகின்ற வகையில் இந்த அனுமதி அமைந்துவிடும். பல்வேறு துறைகளில் ஆர்எஸ்எஸ் பாசிச சிந்தனையாளர்கள் ஊடுருவி இருக்கும் நிலையில் அவர்களைக் களை எடுப்பதற்குப் பதிலாகச் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அங்கீகாரத்தை ஒன்றிய அரசு இந்த நடவடிக்கை மூலம் வழங்குகிறது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த ஆணைக்கு எதிராகக் கடுமையாகக் களமாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.