ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு முன்பாக இவரது மகன் தனது தந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .

அத்துடன் எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் . அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று நான்கு பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றை ஜெயக்குமார் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . அத்துடன் ஜெயக்குமார் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலை நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. ஜெயக்குமார் எழுதியாக கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தியும் துப்பு துலங்கவில்லை.


