ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்தான் - தமிழிசை
ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை , மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க, 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை, பா.ஜ.க நிரப்ப அதிக வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை, அனைவரையும்விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக இருந்தார். இந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்தது என்றார். அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்த போது, நிச்சயமாக சொல்கிறேன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இந்துத்துவா தலைவர்தான்; பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா. கோயில்களில் குடமுழுக்கு, கரசேவகர்களுக்குப் பாராட்டு, ராமர் கோயில் வேண்டும் என கையெழுத்து வாங்கி அனுப்பியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். அவர் தற்போது இருந்திருந்தால் ராமர் கோயில் சென்று ராமரை கும்பிட்டு விட்டு, இந்தியாவின் 100 ஆண்டு கனவு நிறைவேறியது என்ற ஒரு கருத்தைச் சொல்லி இருப்பார் என்றார்.