ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி, வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்-கும் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி சி.சரவணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரிபாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரி பாக்கி தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.


