எனது அமைதி பலவீனம் அல்ல - ஆர்த்தி
எனது அமைதி பலவீனம் அல்ல, உண்மைக்கு மாறாக என்னை தவறாக சித்தரிப்போருக்கு பதிலளிக்க விரும்பவில்லை என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரவி. இவர் சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன்ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர். ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜெயம் ரவி, விவாகரத்துக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனிடையே விவாகரத்து விவகாரம் முழுக்க முழுக்க ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எனவும், குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்தார். இதையடுத்து தன்னை ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அமைதி பலவீனம் அல்ல; உண்மைக்கு மாறாக என்னை தவறாக சித்தரிப்போருக்கு பதிலளிக்க விரும்பவில்லை; என்னுடைய வார்த்தைகள் தவறாக வெளியிடப்பட்டுள்ளன. பரஸ்பர விவாகரத்துக்கு நான் சம்மதித்தாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்திக்க அனுமதி கோரியும் அனுமதி் கிடைக்கவில்லை. யாருடைய நட்பையையும் புண்படுத்தும் விவாதங்களில் நான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன், நான் திருமணத்தின் முக்கியத்துவத்தையும், புனிதத்தையும் மதிக்கிறேன். எங்களுக்குள்ளான தனிப்பட்ட உரையாடலை நான் இன்னும் எதிர்பார்க்கிறேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.