ஜெல்லி மீன்கள் உலா- திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வசந்த திருவிழா நடைபெறும். இவ்விழா மே 13 ஆம் தேதியான நேற்று தொடங்கி 21 ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார். வருகிற 22 ஆம் தேதி வைகாசி விசாகம் திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறுகின்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
வைகாசி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுத்துவரும் நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் அதிகப்படியான ஜெல்லி மீன்கள் உலா வருவதால், கடலில் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பு குழுவினரும், காவல்துறையினரும் கடலில் குளிக்கும் பக்தர்களை அறிவுரை கூறி அப்புறப்படுத்தி வருகின்றனர். ஜெல்லி மீன்கள் உடலில் பட்டால், தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.


