மேயருக்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம்: டபேதார் புகார்
மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன் என டபேதார் மாதவி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் டபேதார் மாதவி மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது.
இந்நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து டபேதார் மாதவி கூறுகையில், “மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மனித உரிமை மீறல். 15 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணிபுரியும் நிலையில், எனது வேலையில் எந்தவிதமான தொய்வும் இருந்ததில்லை. எனக்கு லிப்ஸ்டிக் அணிவது மிகவும் பிடிக்கும், 5 வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உண்டு. தற்போது, மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன்” எனக் குற்றஞ்சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மேயர் பிரியா டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என விளக்கம் அளித்துள்ளார்