“பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை...ஊழலை ஒழித்து சிங்கப்பூராக மாற்றுவேன்”- தொழிலதிபர் மார்ட்டினின் மகன்

 
s s

புதுச்சேரியில் இன்று லட்சிய ஜனநாயக  கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின் மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும்  வகையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத குருமார்களிடம்  ஒரு சேர ஆசி பெற்றார்.

a

புதுவை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு "JCM மக்கள் மன்றம்" மூலம் தீர்வு கண்ட சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், தற்போது சமூக பொருளாதார அரசியல் மாற்றத்தை நோக்கமாக கொண்டு தன் தலைமையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இன்று லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அரசியல் வரலாற்றில் முதல்முறையாக வங்காள விரிகுடா கடலில் தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளார். 

a

அதன் பின் கட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், “பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவே இந்த அரசியல் பயணம். புதுச்சேரியின் அடிப்படை உரிமைகளுக்காக கஷ்டப்படும் மக்களுக்காக இந்த கட்சியை தொடங்கியுள்ளேன். நான் லோக்கல் அரசியல் செய்ய வரவில்லை, இங்கே இருக்கின்ற ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சிண்டிகேட் போட்டு கேள்வி கேட்க மறுக்கிறார்கள். படித்து முடித்த இளைஞர்கள் யாருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. யாருக்கோ வேலை செய்து வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள். நான் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட வரவில்லை. ஊழலை ஒழித்து அயர்லாந்து, சிங்கப்பூர், டென்மார்க் போன்ற நாடாக புதுச்சேரியை மாற்றுவேன். மனிதர்களை காக்கக்கூடிய மருந்தில் கூட ஊழல் செய்கிறார்கள். 3 வயது குழந்தை பலியாகும் அவலம் உள்ளது.” என்றார். முன்னதாக லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இந்து, இஸ்லாமிய கிறிஸ்தவ மத குருமார்களிடம் ஒரு சேர ஆசி பெற்றார். தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பது குறிப்பிடதக்கது.


கட்சி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள  ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது எக்ஸ் தளத்தில், “லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி அறிமுக விழா, புதுச்சேரி- தேங்காய்த்திட்டு துறைமுகப் படகில் நடைபெற்றது. அப்போது கிழக்கு நோக்கி பறக்கும் வகையில், லட்சிய ஜனநாயக கட்சியின் கொடியை ஏற்றி வைத்தேன். அது காற்றில் புதுச்சேரி மக்களின் வளர்ச்சியைப் பெற துடிப்பதுபோல் பறந்தது. அதைத்தொடர்ந்து, இந்து மதத்தைச் சேர்ந்த குரு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இமாம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த போதகர் என மூவரும் சேர்ந்து ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் நடந்த படகு அணிவகுப்பில்,கடல் அன்னை முன்னிலையில், லட்சிய ஜனநாயக கட்சிக் கொடியை அசைத்தேன். அதைத்தொடர்ந்து இந்து முறைப்படி திருக்கைலாய கங்கை தீர்த்தம், கிறிஸ்தவ மத முறைப்படி புனித நீர், இஸ்லாமிய முறைப்படி ஜம் ஜம் தீர்த்தம் ஆகியவற்றை கடலில் ஊற்றி பிரார்த்தனை செய்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.