"ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 
stalin

ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்றும் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட திமுக அரசு முடிவு செய்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. அதை மாற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தியதை ஏற்று ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

govt

முன்னதாக, ஜூலை 18-ஆம் தேதி தான் தமிழ்நாடு நாள் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 'கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியா பல்வேறு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அதனடிப்படையில் முந்தைய அரசு நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது. அதை மறு ஆய்வு செய்திட வேண்டும். அந்த நாளில் நாம் பெற்றதை தவிர இழந்ததே அதிகம். பழைய சென்னை மாகாணம் இன்றுள்ள தமிழ்நாட்டை விட மிகவும் விரிந்து பரந்தது. கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பகுதிகள் அன்று சென்னை மாகாணத்தில் இருந்தன. நம் மண்ணின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் இழந்துவிட்டோம். அந்த நாளை கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.

கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் அன்றைய முதலமைச்சர் அண்ணா முன்மொழிய தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. எனவே தமிழ்நாடு என்ற பெயரில் நாம் கொண்டாட வேண்டிய நாள் ஜூலை 18 தான் என்று தெரிவித்திருந்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியும் இதனை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.