புதிதாக 2 அணிகள் உருவாக்கம்.! ஜூன் 3 ‘செம்மொழி நாள்’ - திமுக பொதுக்குழுவில் அதிரடி முடிவு..!!
மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கல்வியாளர்கள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில் மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் மேலும் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு கல்வியாளார் அணியும், மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சார்பு அணியும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், “ முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!” என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், “கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதுமுதல் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் களங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும் வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு, பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பேற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம்” என பொதுக்குழுவில் உறுதியேற்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


