இதை மட்டும் சரியா செய்தால் போதும்..! அந்த 2 தேர்தல் மாதிரி 2026 தேர்தல் அமையும் - தவெக விஜய்..!!
1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தல் இருக்கப் போகிறது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜய், தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான ‘மை டிவிகே’ (MY TVK) செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து செயலியை தொடங்கி வைத்து ஒரே குடும்பத்திச் சேர்ந்த 3 தலைமுறை உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இந்தச் செயலி வாயிலாகவும் பொதுமக்கள் தங்களை தவெ கழகத்தில் இணைத்துக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “இதற்கு முன்னால் தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய இரண்டு தேர்தல்களைப் போல (1967, 1977 தேர்தல்களைப் போல) 2026 தேர்தலும் அமையப் போகிறது. அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்ற அனைத்து மக்களையும் சந்தித்தனர்.
அண்ணா சொன்ன அதே விஷயத்தை நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. இதைச் சரியாக செய்தாலே போதும். அதனால்தான் இந்தச் செயலியை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” என்று பேசினார்.


