#JUST IN : 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் தரிசனம்: மார்ச் 1 முதல் தொடக்கம்!
கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில், பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரைத் தரிசிக்க 12 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்தச் சிறப்புத் தரிசனம் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான, சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு, மீண்டும் பாதாள அறைக்கு கொண்டு செல்லப்படும். 1915-ம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்கப்படவில்லை. 98 ஆண்டுகளுக்கு பிறகு 2013-ம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை மீண்டும் பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்தநிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீதேவி. பூதேவி உடனாய அத்திவரதர் சிலை மார்ச் 1-ம் தேதி வெளியில் எடுக்கப்பட்டு. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து,மார்ச் 10-ம் தேதி வரை இந்த சிலையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு அத்திவரதர் சிலை பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கடந்த முறை அத்திவரதர் சிலையைத் தரிசிக்க கட்டுக்கடக்காத பக்தர் கூட்டம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகம விதிகளின் படி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை தைலக் காப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் சேவைகளை பக்தர்களே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

