#JUST IN : தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமின் மறுப்பு..!
நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில் செப். 27-ஆம் தேதி மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார் த.வெ.க., தலைவர் விஜய்.இதில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையின் பெயர் பலகை மீது ஏறி நின்றதால், கண்ணாடி சுவர், கண்காணிப்பு கேமரா போன்றவை சேதமாகின. இதுகுறித்து, மருத்துவமனை மேலாளர் அரிச்சந்திரன், 45, நாமக்கல் போலீசில் புகாரளித்தார்.
புகார்படி, நாமக்கல் போலீசார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், த.வெ.க., மாவட்ட செயலாளருமான சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், விஜய் வருகையை முன்னிட்டு, அனுமதிக்கப்படாத இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியதாகவும், போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில், பிளக்ஸ் பேனர்களை வைத்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது உள்பட, ஆறு வழக்குகள் த.வெ.க., மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”தான் எந்த குற்றமும் செய்யவில்லை, சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில், ”காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி அனுமதி பெற்றவர் மனுதாரர். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றை ஆய்வு செய்த நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா என சரமாரியாக கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.கட்சியினர் அடாவடி செயல்களில் ஈடுபடு்ம்போது தனக்குத் தெரியாது என்று எப்படி கூறலாம்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமின் கோரிய மனுவில் அவருக்கு முன்ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது.


