#JUST IN : “யாரையும் புண்படுத்தும்படி பேச வேண்டாம்” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னியரசுக்கும், ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே திமுகவினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறும் என்ற அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நேற்று பின்னிரவில் திமுக எம்.பி. ஆ.ராசா ஒரு ட்வீட்டை பதிவு செய்து பின்னர் அதை நீக்கினார். இருப்பினும் அதன் ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் உலாவி திமுகவுக்கு வசைகளைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இன்று காலையில் மற்றுமொரு ட்வீட்டையும் அவர் பதிவு செய்தார்.
இந்தச் சூழலில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை கொள்கை தோழனை என்று அழைத்ததோடு, “யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல், விசிக இடம்பெறுவது குறித்து ஆ.ராசாவின் கண்டன ட்வீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. நேற்றிரவு 11.16 மணிக்கு ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார்.
அதில் அவர்,
முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’
மூட சாதியை நொறுக்க வேண்டிய
‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்' சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி -
புணர்ச்சிக்கு வேறிடம்
தேடுவதில் தவறில்லை!
பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு
காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்!
வெற்றி நமக்கே - என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த ட்வீட் பரவலாக கடும் கண்டனங்களை சம்பாதித்தது. பெண்களை அவமதிக்கும் வகையில் அவர் அவதூறு பேசியிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்தப் பதிவை ஆ.ராசா நீக்கினார்.
தொடர்ந்து இன்று காலை அவர் மற்றுமொரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!” என்று பதிவிட்டுள்ளார்.
ஆ.ராசாவின் இந்த இரண்டு ட்வீட்களுமே கடும் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

