சென்னை நந்தனம் நிதித்துறை வளாகத்துக்கு அன்பழகன் பெயர்!

 
ttn

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்ட இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பை முடித்தார்.  பேரறிஞர் அண்ணாவின் ஆணைக்கிணங்க 1944 முதல் 1952 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 

ttn

இதையடுத்து தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்ட இவர் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், 9 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்து வந்துள்ளார் . அத்துடன் திமுகவின் பொதுச்செயலாளர் என்ற பெரும் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

ttn

மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்பழகன் சிலையை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அத்துடன் இவ்வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர அடியில் இயங்கிவரும் இந்த வளாகத்தில் கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள், ஓய்வு இயக்ககம், மாநில உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தணிக்கை அலுவலகங்கள், அரசு சிறுசேமிப்புத் துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வருகிறது. நாட்டுடமையாக்கப்பட்ட அவரின்  நூல்களுக்கான நூல் உரிமை தொகையையும் அவரின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்துள்ளார். அத்துடன் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்பழகன் வீட்டில் உள்ள புகைப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.