நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் - அண்ணாமலை, ஜி.கே.மணி புகழாரம்

 
Annamalai

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், கர்மவீரர் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவரும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளைத் திரையில் கொண்டு வந்து அவர்களுக்குப் பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினம் இன்று. ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒரு தலைப்பட்சமான மதச்சார்பின்மையைப் புறக்கணித்து, தனது வாழ்வின் இறுதி வரை தேசியத்தின் பக்கம் நின்ற சிம்மக் குரலோன் அவர்களது புகழ் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


இதேபோல் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள பதிவில், தமிழக திரையுலகின் மிக உயர்ந்த புகழ்பெற்ற உன்னதமானவர் என்பதோடு உலகளவில் தமிழ்க்கலைக்கு பெருமை சேர்த்தவர், எல்லோராலும் ஏற்று பாராட்டும் பெற்றவர். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் எனப் பெயர் கொண்டவர். சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத் திறனை பார்த்து பாராட்டிய தந்தை பெரியார் சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அதிலிருந்து அவருக்கு சிவாஜி கணேசன் என்ற பெயரே நிலைத்தது. சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூசன், செவாவியர், தாதா சாகெப் பால்கே போன்ற பல விருதுகளைப் பெற்றவர். எந்தப் பாத்திரத்திலும் தனித் திறமையுடன் நடிப்பவர். அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துவோம்! போற்றுவோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.