ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் - அண்ணாமலை

 
Annamalai

ஊழலுக்கு எதிரான பா.ஜ.க.வின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது எனவும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என்ற சில விவரங்களை வெளியிட்டு இருந்தார்.  இதில் திமுக அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என். நேரு,  பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி , அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி,  டி.ஆர். பாலு,  ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் ,கலாநிதி மாறன் உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். அத்துடன் சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி .ஆர். பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகினார். அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ந்தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

Annamalai

நீதிமன்றத்திற்கு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஊழலுக்கு எதிரான பா.ஜ.க.வின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. திமுக பைல்ஸ் பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம் உள்ளனர்" என்று கூறினார்.