தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி - அண்ணாமலை

 
Annamalai

பிரதமர் மோடி நம் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா சென்றார். ஐ.நா தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  இதனைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் முக்கியமான வளர்ச்சியை பாராட்டினார். கடந்த ஏழு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது என கூறினார். இதேபோல் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் என கூறினார்.  


இந்நிலையில், பிரதமர் மோடி நம் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி “எப்போதாவது உலகின் பழமையான மொழி எது என்ற விவாதம் வந்தால், எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்” என்று நம் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தினார். இவ்வாறு கூறியுள்ளார்.