வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? - பாலச்சந்திரன் பேட்டி

 
இயல்பைவிட 4% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை.. பாலச்சந்திரன்

தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், இதன் காரணமாக வரும் 15 மற்றும் 16 ஆம்  தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.

rain

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. 7 இடங்களில் மிக கன மழையும், 29 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபி கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. வங்க கடலை பொறுத்தவரை  தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

நாளை  தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,  15 16 தேதிகலில்  வட தமிழகம், புதுவை  மற்றும்  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும்.

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில்  விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில்,  15 - 16 ஆம் தேதி வாக்கில்,  வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 14 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும்" என தெரிவித்தார்.

15 மற்றும் 16 ஆம் தேதிகளில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும், மழை குறித்து தமிழக அரசுக்கு அனைத்து தகவல் மற்றும் தரவுகள் வழங்கி வருவதாகவும், பேரிடர் மேலாண்மை துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.