உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

 
K balakrishnan K balakrishnan

2025 ஜனவரி 5ம் தேதிக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ம் ஆண்டு டிசம்பரில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 5.01.2025 அன்று முடிவடைகிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அந்தந்த மாவட்ட அரசிதழில் தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 27 மாவட்டங்களில் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை.

balakrishnan

இந்திய அரசியலைப்பு சட்டப்பிரிவு 243E(3) (a) ஊரக உள்ளாட்சிகளின் பதவி காலமான 5 ஆண்டுகள் முடியும் முன்பு அவற்றுக்கான தேர்தல் நடத்தி முடிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. உச்சநீதிமன்றமும் இதை உறுதிபடுத்தியுள்ளது. கடந்த காலத்தில் அதிமுக உரிய காலத்தில் தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளின் வேட்டைக்காடாக உள்ளாட்சி அமைப்புகள் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டுகிறோம். அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதையும், ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப தேர்தலை தள்ளி வைப்பது ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, 2025 ஜனவரி 5ம் தேதிக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்குரிய முறையில் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.